கேரளா : தெருநாய்கள் தொல்லை மற்றும் அது தொடர்பான பொதுமக்களின் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, கேரளாவில் பொதுமக்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான மற்றும் ஆபத்தான நோய்களால் அவதிப்பட்டு வரும் தெருநாய்களைக் கருணைக் கொலை செய்வதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நோய்த்தொற்றுகள் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.அதேவேளையில், நாய்களைக் கருணைக் கொலை செய்யும் நடைமுறைகளின் போது கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, எந்தக் காரணத்தைக் கொண்டும் நாய்களுக்கு விஷம் கொடுத்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொடூரமான முறையில் கொல்லக் கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, தகுதி மற்றும் அனுமதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த பிரத்யேக மருந்தினை மட்டும் பயன்படுத்தி, அதனை நரம்பு வழியாக செலுத்தி கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று மாநில அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. விலங்குகள் நலன் மற்றும் முறையான மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
