சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL 2026 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அணிக்காக டிவால்ட் பிரேவிஸ் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 13 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அதிரடியாக தொடங்கினார். ஷிவம் துபே 26 ரன்கள் சேர்த்தார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த CSK அணி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடியது. சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே சிக்சர் மற்றும் பவுண்டரிகள் அடித்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.
ஆனால் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ், சஞ்சு சாம்சனை அவுட் செய்து அணிக்கு முதல் பிரேக் த்ரூ கொடுத்தார். அதன் பிறகு உர்வில் படேலும் வேகமாக ரன்கள் சேர்க்க முயன்றார். ஆனால் சாகிப் ஹுசைன் அவரை கிளீன் போல்டு செய்தார்.
பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா இணைந்து அணியை சீராக முன்னேற்றினர். குறிப்பாக கார்த்திக் சர்மா அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஆனால் மீண்டும் பாட் கம்மின்ஸ் விக்கெட் எடுத்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் ரன் எடுக்க சிரமப்பட்ட நிலையில் 15 ரன்களில் அவுட்டானார். அந்த விக்கெட்டுடன் பாட் கம்மின்ஸ் தனது T20 கிரிக்கெட்டில் 200வது விக்கெட்டையும் பதிவு செய்தார்.
இறுதியில் டிவால்ட் பிரேவிஸ் மற்றும் ஷிவம் துபே இணைந்து அணியை மீட்டனர். பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். துபே 26 ரன்கள் சேர்த்தார். இதனால் சென்னை அணி 180 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 181 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்கம் கொடுத்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் வெறும் 6 ரன்களில் அவுட்டானார்.
அதன்பிறகு அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் இணைந்து அணியை சீராக முன்னேற்றினர். ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய இஷான் கிஷன், பின்னர் அதிரடியாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார்.
அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசன் களமிறங்கி சென்னை பந்துவீச்சாளர்களை அதிரடியாக தாக்கினார்.
கிளாசன் 47 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்சில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் இடம்பெற்றன. மறுபுறம் இஷான் கிஷன் மிகவும் பொறுப்புடன் விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பின்னர் நிதிஷ் குமார் ரெட்டியுடன் இணைந்து இஷான் கிஷன் அணியை வெற்றிக்கரமாக கொண்டு சென்றார். இறுதியில் இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து முக்கிய பங்கு வகித்தார். அதில் 4 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
கடைசியில் ஸ்மரண் ரவிச்சந்திரன் பவுண்டரி அடித்து போட்டியை முடித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்று, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை தொடர்ந்து IPL 2026 பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை அணி பிளே ஆப் செல்ல வாய்ப்பு?
தற்போதைய புள்ளிப்பட்டியல்படி CSK 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டும் மீதமுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் சென்னை அணிக்கு அதிகபட்சமாக 14 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.
CSK பிளேஆஃப் செல்ல
- கடைசி போட்டியில் கண்டிப்பாக பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்
- பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, KKR போன்ற அணிகள் தங்களது மீதமுள்ள போட்டிகளில் தோற்க வேண்டும்
- நெட் ரன் ரேட்லும் சென்னை முன்னேற வேண்டும்
ஆனால் தற்போது CSK-வின் Net Run Rate -0.016 ஆக இருப்பதால் அது கூட அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் சென்னை அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மிகவும் குறைவாகவே பார்க்கப்படுகிறது.எனவே என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
