சென்னை : சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டனும், ஐகானிக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ். தோனி, MI vs CSK போட்டிக்காக அணியுடன் மும்பை பயணம் செய்துள்ளார். இதனால் அவரது ஐபிஎல் 2026 திரும்பம் நெருங்கி வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.CSK அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், தோனியின் பங்கேற்பு குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கால் தசைப்பிடிப்பு காயம் காரணமாக சீசனின் தொடக்கத்தில் அவர் விலகியிருந்தார்.
நெட்ஸில் பேட்டிங் பயிற்சி செய்வது காணப்பட்டாலும், எப்போது மஞ்சள் நிற ஜெர்சியில் களமிறங்குவார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. Cricbuzz கொடுத்துள்ள தகவலின் படி, CSK அணி ஏப்ரல் 23 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கெடே ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிக்காக மும்பை சென்றுள்ளது. தோனியும் அணியுடன் பயணம் செய்துள்ளார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்ற பிறகு பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பேசுகையில்,“அவரது பயிற்சியில் (running loads) முன்னேற்றம் இருக்கிறது. பேட்டிங்கில் அவர் நன்றாக இருக்கிறார். ஆனால் இன்னிங்ஸின் பின்பகுதியில் பேட்டிங் செய்ய வேண்டுமென்றால், வேகமான சிங்கிள்ஸ் மற்றும் டூஸ் ஓடும் திறன் தேவை. அதில் நம்பிக்கையும் வேகமும் அதிகரிக்க வேண்டும். எப்போது விளையாடுவார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ரசிகர்களைப் போலவே நானும் விரைவில் அவர் விளையாட வேண்டும் என்று நம்புகிறேன்” என்றார்.
CSK அணி இந்த சீசனில் காயங்கள் பெரும் சவாலாக உள்ளது. கலீல் அஹ்மத் குவாட்ரிசெப் காயம் காரணமாக முழு சீசனையும் தவறவிட்டுள்ளார். அயுஷ் மாத்ரே சன் ரைசர்ஸ் போட்டியில் ஹாம்ஸ்ட்ரிங் காயம் அடைந்து ஏப்ரல் 20 அன்று மும்பையில் ஸ்கேன் செய்ய உள்ளார். நாதன் எல்லிஸ் சீசன் தொடக்கத்திலேயே விலகியுள்ளார்.இதேவேளையில், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அகாஷ் மாத்வால் CSK அணியுடன் பயணம் செய்தது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அவர் ஹைதராபாத்தில் CSK அணிக்காக டிரையல்ஸில் பங்கேற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் CSK வீரரும் மகாராஷ்டிரா ஆல் ரவுண்டருமான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மும்பையில் டிரையல்ஸில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.CSK அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சீசனில் 4-வது தோல்வியை சந்தித்துள்ளது. 2 வெற்றிகளுடன், ஏப்ரல் 23 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.தோனியின் திரும்பம் நெருங்கி வரும் நிலையில், CSK ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அவரது அனுபவமும், பினிஷிங் திறனும் அணிக்கு மிகவும் தேவைப்படும் என்று பயிற்சியாளர்கள் நம்புகின்றனர்.
