பேட்டிங்கும் சரியில்லை...கேப்டன்சியும் சரியில்லை!ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த இர்பான் பதான்!

சஞ்சு சாம்சன் நன்றாக செட்டில் ஆகியிருந்த நிலையில், இளம் பந்து வீச்சாளரை அனுப்பியது சரியான முடிவல்ல என இர்பான் பதான் கூறியுள்ளார்.

Hero Image

மும்பை : இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸிடம் 103 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முடிவுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஏப்ரல் 23, 2026 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸிடம் பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்தத் தோல்விக்குப் பிறகு இஃபான் பதான் தனது யூடியூப் சேனலில் பேசியபோது, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் முடிவுகளை கடுமையாக சாடினார். போட்டி தொடங்குவதற்கு முன்பே, கடந்த 6 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளதாக பதான் சுட்டிக்காட்டினார். ஆனால் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்ற பிறகும் முதலில் பேட்டிங் செய்யாமல், சேஸ் செய்ய முடிவு செய்தார். இந்த முடிவு மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக பதான் கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “பிட்சில் சற்று டர்னும் உதவியும் இருந்த நிலையில், மும்பை அணியின் பேட்டிங் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய தைரியத்தை காட்ட வேண்டும், ஆனால் அதைச் செய்யவில்லை” என்று அவர் விமர்சித்தார்.

மேலும், போட்டியின் 15 அல்லது 16வது ஓவரில், இரண்டாவது போட்டியில் விளையாடிய இளம் பந்து வீச்சாளர் கிரிஸ் பகத்-ஐ, நன்றாக ஆடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சனுக்கு எதிராக பந்து வீச அனுப்பியது பெரும் தவறு என்று பதான் சுட்டிக்காட்டினார். “சஞ்சு சாம்சன் நன்றாக செட்டில் ஆகியிருந்த நிலையில், இளம் பந்து வீச்சாளரை அனுப்பியது சரியான முடிவல்ல. கேப்டனாக பொறுப்பேற்று சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கில் குறைபாடு இருப்பதாக பதான் சுட்டிக்காட்டினார். 2023ஆம் ஆண்டு முதல் ஹர்திக் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றும், பிட்சில் சற்று உதவி இருந்தால் கால்களைப் பயன்படுத்தி ஆட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.“அவரது ஸ்டான்ஸ் இப்போது அகலமாக மாறியுள்ளது. இதனால் பேஸ் பிட்சில் நன்றாக ஆடுகிறார். ஆனால் சற்று கிரிப் இருக்கும் பிட்சில் சிரமப்படுகிறார். உலகக் கோப்பையிலும் இதைப் பார்த்தோம். இதை சரி செய்ய வேண்டும்” என்று பதான் கூறினார்.

இறுதியாக, “ஒட்டுமொத்தமாக ஹர்திக் இந்தப் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டியிருந்தது. மும்பை அணி இப்போது புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. குஜராத்துக்கு எதிராக சிறப்பான வெற்றி, சென்னைக்கு எதிராக பெரிய தோல்வி – இது மும்பை அணியை பின்னுக்கு இழுத்துச் செல்கிறது” என்று பதான் முடித்தார்.இந்தத் தோல்விக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.