பேட்டிங்கும் சரியில்லை...பௌலிங்கும் சரியில்லை! அக்ஸர் பாடலை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேலின் ஐபிஎல் 2026 சீசன் செயல்பாட்டை முன்னாள் இந்திய தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Hero Image

சென்னை : ஏப்ரல் 27 அன்று அருண் ஜைட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் செயல்பாட்டை விமர்சித்த ஸ்ரீகாந்த், குறிப்பாக அக்சர் படேலின் பங்களிப்பை கேள்விக்கு உள்ளாக்கினார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த் கூறியதாவது:“அக்சர் படேல் பேட்டால் நீண்ட காலமாக எதுவும் செய்யவில்லை. ஆல்-ரவுண்டராகவும், கேப்டனாகவும் கூட அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. பேட்டாலோ பந்தாலோ கடைசியாக எப்போது ஆபத்தான (deadly) ஆட்டத்தை வெளிப்படுத்தினார்? இப்படி இருக்கும்போது அணி எப்படி முன்னேறும்?” எனவும் தெரிவித்தார்.

மேலும், டெல்லி அணியின் பேட்டிங் வரிசையில் உள்ள பலவீனங்களையும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார்:“டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நீண்ட காலமாக பெரிய ரன்கள் எடுக்கவில்லை. நிதீஷ் ராணாவை பவுன்ஸ் செய்தால் அவர் முடிந்துவிடுவார். சமீர் ரிஸ்வி இன்னிங்ஸின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிரமப்படுகிறார். ஒரு ஸ்பின்னரை 20 ரன்கள் அடித்து செட்டில் ஆனால் மட்டுமே அவர் நன்றாக ஆடுகிறார். டேவிட் மில்லரும் எந்த பெரிய பங்களிப்பையும் செய்யவில்லை” என்று விமர்சித்தார்.

இதேவேளையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் படானியையும் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் குறித்து படானி அளித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீகாந்த்,“மற்றவர்களைப் பற்றி பேசும் முன்பு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒருபோதும் பெரிதாக பேசக் கூடாது. அவர் பெரிதாக பேசினார், இப்போது அவரை மௌனமாக இருக்க வைத்துவிட்டார்கள். இப்போது எல்லோரும் அவரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் தனது வேலையை மட்டும் பார்த்திருந்தால் போதும். பிளெமிங் பற்றி பேச என்ன செய்துவிட்டார்?” என்று கேள்வி எழுப்பினார்.