டி20 உலகக்கோப்பை தொடரில் அபிஷேக் ஆக்ரோஷமாக விளையாடுவார்! சஞ்சய் பங்கர் ஓபன் டாக்!

அவரது பேட் ஸ்விங், ஸ்பின்னர்களுக்கு கிரீஸில் நின்றபடியே சிக்ஸர் அடிக்கும் திறன் என அபிஷேக் சர்மா குறித்து சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

abhishek sharma

டெல்லி :இந்திய அணியின் இடது கை தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அணி விரும்பும் பயமற்ற, ஆக்ரோஷமான கிரிக்கெட் பாணியை பிரதிபலிக்கும் வீரர் என்று முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்த அபிஷேக் சர்மா, 859 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி பயமற்ற, ஆக்ரோஷமான டி20 கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறது என்றும், இதற்கு அபிஷேக் போன்ற வீரர் தேவை என்றும் சஞ்சய் பங்கர் ஜியோஸ்டாரில் கூறினார்.

அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஸ்டைல் குறித்து பேசிய முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் சுரேஷ் ரெய்னா, “அவரது பேட் ஸ்விங், ஸ்பின்னர்களுக்கு கிரீஸில் நின்றபடியே சிக்ஸர் அடிக்கும் திறன், கவர்ஸ் வழியாக ஆடும் ஷாட்கள், ஃபுல் பந்துகளில் டிரைவ்கள் அடிக்கும் விதம் ஆகியவை சிறப்பாக உள்ளன. கால்களை நன்றாக பயன்படுத்தி, நேராக பவர் ஹிட்டிங் செய்வதில் வலுவானவர்” என்று புகழ்ந்தார்.

அபிஷேக் ஆஃப் சைடிலும் சிறப்பாக ஆடுவதாகவும், முதல் பந்திலிருந்தே 4 அல்லது 6 அடிக்கும் முனைப்புடன் விளையாடுவதாகவும் ரெய்னா கூறினார். “அவர் லென்த்தை நன்றாக புரிந்துகொள்கிறார். பலவிதமான ஷாட்களை ஆடும் திறன் கொண்டவர்” என்றும் சுரேஷ் ரெய்னா சேர்த்துக் கூறினார்.

இந்திய அணி பிப்ரவரி 7ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவுக்கு எதிராக தனது டி20 உலகக்கோப்பை பாதுகாப்பு பயணத்தை தொடங்குகிறது. அபிஷேக் சர்மாவின் பயமற்ற ஆட்டம், இந்திய அணியின் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு முக்கிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபிஷேக் சர்மாவின் தற்போதைய ஃபார்ம் மற்றும் தரவரிசை நிலை, அணியின் நவீன டி20 அணுகுமுறைக்கு ஏற்றவாறு உள்ளது. சஞ்சய் பங்கர் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் பாராட்டு, அபிஷேக் இந்திய டி20 அணியின் எதிர்காலத்திற்கு முக்கிய வீரர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உலகக்கோப்பை தொடரில் அவரது ஆட்டம் இந்தியாவுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.