காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் – திமுக கூட்டணி பழைய நிலைமைக்கு திரும்புமா என்பதற்கு காலம்பதில் சொல்லும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, ஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை தான்.அந்த அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.
இதன் பின்னர் இது குறித்து திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு கூறுகையில், கூட்டணியில் பிரச்னை இருந்தால் ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி திடீர் அழைப்பு விடுத்தார்.இதனால் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்தார் அழகிரி. இதன் பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள்.இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை.திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து மீண்டும் திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு கூறுகையில்,திமுக – காங்கிரஸ் கூட்டணி சரியாகி விட்டதா? என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். .மு.க.ஸ்டாலினை விமர்சித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர் என்று தெரிவித்தார். இதனால் மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.