கமல்ஹாசன் மீதான அவதூறு வழக்கு ரத்து!

The High Court has quashed the case filed against Kamal Haasan in the Valliyoor court for spreading slander about the Mahabharata.

மஹாபாரதம் குறித்து அவதூறு பரப்பியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக வள்ளியூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம்,பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அதில்,தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்ததாகவும்,எனவே,அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் கமல் நேரில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில்,வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யவும்,விசாரணைக்கு தடை விதித்து,நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை,கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும்,வள்ளியூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு தற்போது விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து,இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன்,”கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இல்லை.எனவே,வள்ளியூர் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார்.