முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா சிலைகள் – புதுச்சேரி சட்டப்பேரவையில் வலியுறுத்தல்...!

Statues of Karunanidhi and Jayalalitha in Puducherry: Insistence in the Legislative Assembly ...!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா அவர்களுக்கு புதுச்சேரியில் சிலைகள் அமைக்க பேரவையில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் 15 வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க வேண்டும் என்று புதுச்சேரி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி வலியுறுத்தினார்.

இதனையடுத்து,எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், “கடந்த ஆட்சியில் கருணாநிதி சிலை அமைக்க இடங்கள் பார்க்கப்பட்டன. சட்டப்பேரவைக்கு எதிரே சிலை அமைக்க முடிவு எடுத்த நிலையில் ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.எனினும்,தற்போது சிலை கமிட்டி இருக்கிறது.அதை மீண்டும் அமைத்து கருணாநிதி அவர்களுக்கு  சிலை அமைக்க வேண்டும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து,உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு கண்டிப்பாக சிலை அமைக்க வேண்டும் .அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சிலை வைக்கும் கோரிக்கையுள்ளது. அதையும் நிறைவேற்ற வேண்டும்”,என்று வலியுறுத்தினார்.

அதேபோல்,மற்ற உறுப்பினர்களும் முன்னாள் புதுச்சேரி முதல்வர் சண்முகம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர்.இறுதியாக,புதுச்சேரி பேரவைத் தலைவர் ராஜவேலு,தலைவர்களுக்கு சிலை நிறுவ வேண்டும், முதல்வர் அதைச் செய்து வருவார்” என்று பதில் அளித்துள்ளார்.