கர்நாடக அமைச்சரின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!!

pmk founder Ramdas said the Karnataka minister's remarks were reprehensible as they could destabilize relations between the two states.

இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.

மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். அணை கட்டுவதில் 100% உறுதியாக உள்ளோம் என்றும் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. பிரச்சனைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால் அணையை நிறுத்த எந்த காரணமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது ஆகும்.

மேகதாது அணையை கட்டக்கூடாது என்று தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒப்புதலின்றி அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அதன்பிறகும் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு உள்ளிட்ட எதையும் மதிக்காமல் அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அமைச்சர் பொம்மை தொடர்ந்து பேசி வருவது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களிடை உறவு தத்துவத்திற்கு எதிரானது.

மேலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகளை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

unknown node