குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு ! கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 -ஆம் தேதி வரை திமுக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கையெழுத்து

குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 -ஆம் தேதி வரை திமுக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை கொளத்தூரில் இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த ஜனவரி 24 ஆம் தேதி குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது .இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் முடிந்த பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது.குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 -ஆம் தேதி வரை திமுக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பெறப்படும் கையெழுத்து பிரதிகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அளிக்க உள்ளோம்.ஒவ்வொரு மாவட்ட தலைநகரம்,மாநகரம்,நகரம் ,பேரூராட்சி,ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெறும்.இந்த கையெழுத்து இயக்கம்  கட்சிக்கு அப்பாற்பட்டது.இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி  கட்சிகள் சார்பில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.சென்னை கொளத்தூரில் இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கத்தை கனிமொழி எம்.பி.யும், சென்னை மண்ணாடியில் பகுதியில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தனர்.