டெல்லி சிறுமி மரணம் : ராகுல் காந்தி புகைப்படங்களை பகிர்ந்ததால், ட்வீட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய NCPCR!

The National Commission for the Protection of the Rights of the Child has sent a notice to Rahul Gandhi on Twitter for sharing photos of his condolences to the family of the deceased girl in Delhi.

டெல்லியில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்களை ராகுல் காந்தி டுவிட்டரில் பகிர்ந்ததால் ட்விட்டருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி தலித் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று சிறுமியின் வீட்டுக்கு சென்று, அச்சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் சிறுமியின் பெற்றோர் மற்றும் ராகுல் காந்தி காருக்குள் அமர்ந்து பேசிய போது எடுக்கப்பட்ட வண்ணம் இருந்தது. இதில் சிறுமியின் பெற்றோரின் முகம் தெளிவாக தெரிந்தாலும், அது சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாலும் இந்த பதிவு குறித்து சர்ச்சை கிளம்பி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், போக்சோ சட்டத்தை மீறி பெற்றோரின் புகைப்படத்தைத் பதிவு செய்வதன் மூலம் சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ராகுல் காந்திக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பி அந்த பதிவை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவர் சிறுமிகளின் அடையாளம் வெளிப்படுத்தக்கூடிய எந்த தகவல் அல்லது புகைப்படங்களையும் வெளியிடுவது சட்டவிரோதமானது எனவும் ட்விட்டருக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் ஒரு முறை எச்சரித்து நினைவு படுத்தி உள்ளது.