முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Minister Jayakumar has stated that the alliance is only with the party that will accept Edappadi Palanisamy as the Chief Ministerial candidate

அதிமுக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட  எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று கூறினார்.முருகனை தொடர்ந்து பாஜகவின் தலைவர்களான  வானதி சீனிவாசன்,அண்ணாமலை,ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இதே கருத்தை கூறி வருகின்றனர்.ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது பேச்சுக்கள் அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அதிமுகவினரும் பதில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது.அதிமுக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட  எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி. இதுவே அதிமுகவின் முடிவு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியில் இருப்பதை பா.ஜ.க.மறுக்கவில்லை. எங்கள் முடிவையே பா.ஜ.க.பின்பற்றுவார்கள் என  நம்பிக்கை உள்ளது.