40 தொகுதிகள் கேட்டு அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கிறோமோ ? – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம்

Are we asking for 40 constituencies and giving crisis to AIADMK? - Tamil Nadu BJP leader L Murugan's explanation

அதிமுகவிடம் 40 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக செய்திகள் அதிகம் வெளியாகி வந்த நிலையில் ,தமிழக பாஜக தலைவர் முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த ஆண்டு  அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று கூறினார்.ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது பேச்சு அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அதிமுகவிடம் 40 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக செய்திகள் அதிகம் வெளியாகி வந்தது.

இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள் அதிமுகவிடம் 40 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருவதாக கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த முருகன், நாங்கள் 40 தொகுதி கேட்டதாக நீங்களே சொல்லக்கூடாது.40 தொகுதிகள் நாங்கள் எங்கே கேட்டோம்.தேர்தல் நேரத்தில் எத்தனை தொகுதிகளை கேட்போம் என்று கூறுவோம் என்று தெரிவித்துள்ளார்.