"சீனாவை விட்டுவிட்டு.., இந்தியா உடனான உறவிற்கு தீயிடுவதா?" டிரம்பின் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு.!

இந்தியப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Nikki Haley - Trump

வாஷிங்டன் :அமெரிக்காவின் முன்னாள் ஐ.நா. தூதரும் குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நிக்கி ஹேலி, இந்தியாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 25% வரி விதிப்பு அச்சுறுத்தல் குறித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவுகளை நிக்கி ஹேலி நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார். சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுக்க இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுடன் வலுவான கூட்டாண்மை அவசியம் என்று அவர் நம்புகிறார்.

அந்த வகையில், தற்பொழுது சீனா போன்ற எதிரி நாட்டிற்கு சலுகைகளை வழங்க வேண்டாம் என்றும், இந்தியா போன்ற நட்பு நாடுடனான உறவைக் கெடுக்க வேண்டாம் என்றும் டிரம்பை எச்சரித்தார். டிரம்ப் நிர்வாகம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக நிக்கி ஹேலி குற்றம் சாட்டினார்.

சீனாவுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கா 90 நாள் வரி விலக்கு அளித்ததாகவும், அதே நேரத்தில் இந்தியா மீது கடுமையான கட்டுப்பாடுகள் காட்டப்படுவதாகவும் அவர் கூறினார். ஹேலியின் இந்த எதிர்ப்பு, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதனிடையே, டிரம்பின் இந்த வரி அச்சுறுத்தல், உலக வர்த்தகத்தில் பதிலடி நடவடிக்கைகளைத் தூண்டி, உலகப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை, ஜவுளி உள்ளிட்ட துறைகள் இந்த வரியால் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.