மனிலா:ஃபிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள செபு தீவின் வடக்கு கடற்கரையில், செப்டம்பர் 30, 2025 அன்று இரவு 9:59 மணிக்கு (உள்ளூர் நேரம்; 13:59 GMT) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் செபு தீவின் வடக்கு முனையில் உள்ள போகோ நகருக்கு அருகே, கடலில் 19 கிலோமீட்டர் தொலைவில், 5 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.
90,000 மக்கள் வசிக்கும் போகோ நகரம் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதல் நடுக்கத்தைத் தொடர்ந்து, 5.0 ரிக்டர் அளவு மற்றும் அதற்கு மேல் நான்கு பின்னடுக்கங்கள் (aftershocks) இப்பகுதியை உலுக்கின. ஃபிலிப்பைன்ஸ் சிவில் டிஃபென்ஸ் அலுவலகத்தின் துணை நிர்வாகி ராஃபேலிடோ அலெக்ஸாண்ட்ரோ, மனிலாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்கின்றன, எனவே இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். புதிய அறிக்கைகள் வரும்போது உயிரிழப்பு எண்ணிக்கை மாறுபடுகிறது,” என்றார். முதலில், தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சில் (NDRRMC) 26 பேர் உயிரிழந்ததாக அறிவித்திருந்தது, ஆனால் இது பின்னர் 60-ஆக உயர்ந்தது. பெரும்பாலான உயிரிழப்புகள் போகோ நகரத்தில் நிகழ்ந்துள்ளன, இது செபு மாகாணத்தின் முக்கிய பகுதியாகும்.
நிலநடுக்கத்தால் போகோ நகரில் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் சரிந்தன, சாலைகளில் பிளவுகள் ஏற்பட்டன. பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயமான சாந்தா ரோசா டி லிமா உள்ளிட்ட பல முக்கிய கட்டிடங்கள் பகுதியளவு சேதமடைந்தன. இரவு நேரத்தில் நிகழ்ந்ததால் மீட்பு பணிகள் தாமதமாகின, மேலும் பின்னடுக்கங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தின. செபு மாகாண ஆளுநர் பமலா பாரிகுவாட்ரோ, சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “அமைதியாக இருங்கள், திறந்தவெளி இடங்களுக்கு செல்லுங்கள், கட்டிடங்கள் மற்றும் சுவர்களை தவிர்க்கவும்,” என்று மக்களை வலியுறுத்தினார்.
ஃபிலிப்பைன்ஸ், பசிஃபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ புவியியல் பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 2013-ல் செபு மற்றும் போஹோல் தீவுகளில் ஏற்பட்ட 7.2 அளவு நிலநடுக்கத்தில் 220 பேர் உயிரிழந்தனர், 2019-ல் 6.9 அளவு நிலநடுக்கத்தில் 8 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து செபு மாகாணத்தில் ‘பேரிடர் நிலை’ அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
