காத்மாண் :நேபாளத்தில் வன்முறை தணிந்து வருவதாகவும், இன்று (செப்டம்பர் 10, 2025) முதல் விமான சேவைகள் மீண்டும் தொடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், நேபாள அரசுக்கு எதிரான Gen Z போராட்டத்தால், காத்மாண்டு விமான நிலையத்தில் இடைநிறுத்தப்பட்ட விமானங்கள் இன்று முதல் மீண்டும் இயங்கும் என நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம், அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்டவை, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், முழுமையான விமான சேவைகள் மீண்டும் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
வன்முறையைக் கட்டுப்படுத்த நேபாள இராணுவம் நாடு தழுவிய கட்டுப்பாடுகளை விதித்ததை அடுத்து, இன்றைய தினம் அதிகாரிகள் கூட்டத்தை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், போராட்டங்கள் முழுமையாக ஓயவில்லை என்றும், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலைமை மேலும் சீரடையும் வரை பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும், பயண ஆலோசனைகளை கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
