நேபாளத்தில் கோர வெள்ளப் பேரழிவு! 1,924 பேர் மாயம்... மீட்புப் பணிகள் தீவிரம்!

நேபாளத்தில் 579 பேரும், திபெத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hero Image

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோரமான திடீர் பனிப்பாறைச் சரிவு மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேபாள பேரிடர் மேலாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, நேபாளத்தில் மட்டும் குறைந்தபட்சம் 579 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,924 பேரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திபெத் பகுதியில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 558 பேரைக் காணவில்லை எனவும் சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த புதன்கிழமை காலை இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை திடீரெனச் சரிந்து விபத்துக்குள்ளானது. சுமார் 1,200 மீட்டர் உயரத்திலிருந்து சரிந்து விழுந்த இந்தப் பனிப்பாறை, வழிநெடுகிலும் இருந்த பாறைகள் மற்றும் குப்பைகளைத் தன்னுள் சேர்த்துக்கொண்டு லெண்டே நதியில் அதிவேகமாகப் பாய்ந்தது.

இதன் காரணமாக ஏற்பட்ட மாபெரும் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் ராசுவா, நுவாகோட் மற்றும் தடிங் மாவட்டங்களை உருக்குலைத்தது. குறிப்பாக, வெறும் 30 நிமிட இடைவெளியில் திரிசூலி நதியின் நீர்மட்டம் 9 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், இந்த நிலஅதிர்வுக்கான சமிக்ஞை நிலச்சரிவின் காரணமாகவே ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தச் சரிவு ஏற்பட்ட இடத்தில் புதிது புதிதாக நீர் தேங்கி ஏரி போல உருவாகியுள்ளதால், இரண்டாவது முறையாகப் பேரழிவான பெருவெள்ளம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஏரியின் அபாயக் குறியீடுகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது அந்த ஏரியின் ஆபத்துகள் ஓரளவு கட்டுக்குள் இருப்பதாகக் கருதப்படுவதால் மீட்புப் பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன.

கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை ஆபத்துகள் நிபுணர் ஆல்டன் பையர்ஸ் கூறுகையில், புதிய ஏரியைத் தடுத்து நிறுத்தி வைத்துள்ள அணைப் பகுதி மிகவும் நிலையற்றதாகவும், தளர்வான குப்பைகளால் ஆனதாகவும் இருப்பதால் அதைப் பாதுகாப்பது சவாலாக உள்ளது என்றார். பாதுகாப்பான முறையில் இயற்கையாகவே அந்த நீர் வடிந்து செல்வதே சிறந்தது என்றும், கைக்கருவிகள் மற்றும் பிற நவீன முறைகளைப் பயன்படுத்தி சீனா இந்த ஏரியின் நீர்மட்டத்தைக் குறைக்க முயலலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் பேராபத்தைத் தொடர்ந்து, சீனாவின் பிரதமர் லி கியாங் வியாழக்கிழமை அன்று ஜியிரோங் பேரிடர்ப் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அதிபர் சி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அறிவியல் பூர்வமான மீட்புத் திட்டங்களை வகுப்பதற்கும், பனிப்பாறை ஏரிகளின் மீது தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைச் சங்கம், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியுள்ளன. சேறும் சகதியுமாக உள்ள சாலைகள் மற்றும் துண்டிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளை மீட்புக்குழுவினர் முழுமையாகச் சென்றடைந்தால் மட்டுமே உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவரும் என்று அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கோர வெள்ளப் பேரழிவு! 1,924 பேர் மாயம்... மீட்புப் பணிகள் தீவிரம்!