அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் மூடப்பட்ட ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக புதிய கப்பல் பாதைகளை உருவாக்குவது தொடர்பாக ஓமான் நாட்டுடன் இறுதிக்கட்ட ஒப்பந்தத்தை எட்ட உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த பாதையை முழுமையாகத் திறப்பதற்கு முன்பு அமெரிக்கா தரப்பில் இழப்பீடு வழங்குவதுடன், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவ மிரட்டல்களை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற தனது நிபந்தனையை ஈரான் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ஓமான் - ஈரான் ஒப்பந்தம்
பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கிய நாடான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இந்நிலையில், ஓமானுக்கும் இரானுக்கும் இடையே புதிய கப்பல் பாதைகளை கொண்டு வரும் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஜலசந்தி முறைப்படி திறக்கப்படும் பட்சத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய புதிய கப்பல் பாதைகளை இந்த ஒப்பந்தம் தீர்மானிக்கும் என்று மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்கா தனது நிபந்தனைகளை நிறைவேற்றாத வரை ஜலசந்தி திறக்கப்படாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், ஜூன் மாத இடைக்கால ஒப்பந்தத்தை வாஷிங்டன் மீறும் வரை நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கப்போவதில்லை என்றும் அராக்சி தெரிவித்தார். இதனிடையே, இடைத்தரகர்கள் மூலமாகவே தற்போது செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் முக்கிய நிபந்தனைகள்
- ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்றால் அமெரிக்கா கீழ்க்கண்ட நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என ஈரான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
- பரவலான அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
- ஈரான் மீதான மேலும் பல மிரட்டல்களை நிறுத்த வேண்டும்.
- ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், யேமன் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும்.
- வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை அகற்ற வேண்டும்.
- ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.
- முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவிக்க வேண்டும்.
