ஹார்முஸ் மூடல் தாக்கம்… உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்!

உள்நாட்டு தேவையை சமாளிக்க எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்திவைக்க நிறுவனங்களுக்கு சீனா உத்தரவு

Featured image

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தற்போது 7-ஆம் நாளை எட்டியுள்ளது. இந்தப் போர் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியதால், உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (சுமார் 20 சதவீதம்) தடைபட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தப் போர் பதற்றத்தால் பல நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. பாகிஸ்தான் அரசு எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மக்கள் எரிபொருள் பெறுவதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல் இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலங்கையில் ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய நிலையில், இந்தப் போர் பதற்றம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. தாய்லாந்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்துள்ளன. வங்கதேசத்தில் எரிபொருள் கிடைப்பது அரிதாகியுள்ளது.

சீனா தனது உள்நாட்டு தேவையை சமாளிக்கும் நோக்கில் எரிபொருள் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான சீனா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதால், ஆசியா முழுவதும் எரிபொருள் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் இந்த முடிவு உலக சந்தையில் எண்ணெய் விலையை இன்னும் தள்ளும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தப் போர் காரணமாக உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்துள்ளன. தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் உடனடியாக இடைநிலை நடவடிக்கை எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியை சந்திக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.