சென்னை : பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை, தனது அரசியல் எதிர்காலம் மற்றும் புதிய பயணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நேரலையில் வந்த அவர் தமிழக மக்களுக்காக பணியாற்றிய அனுபவத்திற்கு நன்றி தெரிவித்து, இனி புதிய அரசியல் பாதையில் பயணிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அண்ணாமலை, “தமிழக மக்களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். நான் எந்த இடத்தில் அரசியல் பயணத்தை தொடங்கினேனோ, அதே இடத்தில் மரியாதையுடனும் அன்புடனும் விடைபெறுகிறேன். ஆனால் என்னுடைய பாதை வேறு. இனி பயணிக்க வேண்டிய திசை வேறு. எனது இலக்குகள் இன்னும் பெரியதாக இருக்கின்றன” என்றார்.
மேலும், “அதிகமான மக்களை இணைத்து செயல்பட வேண்டும். தமிழக அரசியலின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றக்கூடிய ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது. அதற்காகவே புதிய பாதையை தேர்வு செய்துள்ளேன். இன்று முதல் புதிய சிந்தனை, புதிய பார்வை மற்றும் புதிய அரசியல் பரிமாணத்துடன் ஒரு புதிய இயக்கத்தை தொடங்குகிறோம். அதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று கூறினார்.
பாஜக குறித்து கருத்து தெரிவித்த அவர், “தமிழகத்தை அணுகுவதில் பாஜக மூத்த தலைவர்கள் சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை. தமிழக அரசியல் தொடர்பாக நான் தொடர்ந்து முன்வைத்த கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அதனால் எதிர்காலத்தை நோக்கி புதிய பயணத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
தமிழக அடையாளம் குறித்து பேசும்போது, “தமிழ்நாட்டின் அடையாளத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. ‘நீங்கள் தமிழரா? இந்தியரா?’ என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் பெருமை மிகு இந்தியன்; அதே நேரத்தில் பாரம்பரிய தமிழனும் கூட. இந்தியன் என்ற அடையாளத்துடனும், தமிழன் என்ற பெருமையுடனும் நான் தொடர்ந்து செயல்படுவேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
