விளாத்திகுளம் மாணவி கொலை - குற்றவாளி முனிஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hero Image

தூத்துக்குடி : மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சம்பவம் நடந்த 77 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது தமிழக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த மார்ச் 10ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் திடீரென மாயமானார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மறுநாள் காலை, வேடநத்தம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து தகவல் வெளியானதும் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது தமிழக சட்டமன்ற தேர்தல் சூழல் நிலவி வந்ததால், இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரிய அரசியல் மற்றும் சமூக பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சேர்ந்த 25 வயதான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறை விசாரணையை வேகப்படுத்தியது. சம்பவம் நடந்த 20 நாட்களிலேயே விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து போக்சோ நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

வழக்கின் போது மொத்தம் 71 சாட்சிகள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மேலும் தடய அறிவியல் துறை அதிகாரிகளும் காணொலி வாயிலாக ஆதாரங்களை சமர்ப்பித்தனர். அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.

விசாரணை முடிவில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது நிரூபணமானதால் தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. பின்னர், அவருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான விசாரணையும், துரித தீர்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வந்த நிலையில், 77 நாட்களிலேயே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.