சென்னை : தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் தவெகவுக்கு 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதுவரை அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்து 334 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) விஜய் ஒரே நாளில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். காலை 10 மணிக்கு பெரம்பூர் MKB நகர் பகுதியில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கும் விஜய், பின்னர் கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
விஜய்யின் பிரச்சார அட்டவணை வருமாறு
காலை 10:00 மணி – பெரம்பூர் MKB நகர்
மதியம் 01:00 மணி – கொளத்தூர்
மதியம் 02:00 மணி – வில்லிவாக்கம்
மதியம் 03:00 மணி – அண்ணா நகர்
மாலை 04:00 மணி – விருகம்பாக்கம்
ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 3,000 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் தவெக தலைவர் விஜய், தொகுதி மக்களிடம் நேரடியாக தனது கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைக்க உள்ளார்.
ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் விஜய்யின் இந்தத் திட்டம், தவெகவின் தேர்தல் உத்தியில் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரச்சாரம் வட சென்னைப் பகுதியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று தவெக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
