சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.3,200 சரிந்தது. ஒரே நாளில் மொத்தம் ரூ.5,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும், ஒரு கிராம் ரூ.13,900-க்கும் விற்பனையாகிறது. இது நகைப்பிரியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
நேற்று மாலை வரை சவரன் ரூ.1,16,560-க்கு விற்ற நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் இந்த விலையில் கிடைக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் தங்க விலைக்கு இன்று மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.வெள்ளி விலையும் இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 சரிந்து ரூ.260-க்கு விற்பனையாகிறது.
கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கு வர்த்தகம் நடக்கிறது. தங்கத்துடன் இணைந்து வெள்ளியும் சரிந்துள்ளது.இந்த பெரிய விலை சரிவு திருமண சீசன் மற்றும் பண்டிகை காலத்தில் தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. நகை வியாபாரிகள் கூறுகையில், “மக்கள் எதிர்பார்ப்பது போல ஒரு லட்சத்திற்கு கீழ் குறைய வாய்ப்பு உள்ளது.
ஆனால் சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக மீண்டும் உயர வாய்ப்பும் இருக்கிறது” என்று தெரிவித்தனர்.இன்றைய அதிரடி சரிவுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தளர்வு, டாலர் மதிப்பு ஸ்திரமடைதல், மத்திய கிழக்கு பதற்றத்தில் சிறிது குறைவு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. நகைப்பிரியர்கள் இந்த விலை குறைவை பயன்படுத்தி வாங்குவதற்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும், நிபுணர்கள் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
