சென்னை :SIR (Special Intensive Revision) என்பது தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி. இதன் நோக்கம் வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சுத்தப்படுத்தி, போலி வாக்காளர்களை நீக்கி, உண்மையான வாக்காளர்களை மட்டும் உறுதி செய்வது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை மட்டுமே இந்தப் பணி நடக்கிறது. இந்தக் காலத்தில் ஒவ்வொரு வாக்காளருக்கும் “SIR படிவம்” (Form 6, 7, 8, 8A) வீடு வீடாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அதை நிரப்பி திருப்பிக் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 6.16 கோடி பேருக்கு (96%) SIR படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன. சென்னையில் 96% விநியோகம் நடந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவே 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வழங்கப்பட்ட படிவங்களில் 50% (சுமார் 3 கோடி) ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படுகிறது. மீதமுள்ளவர்கள் டிசம்பர் 4-க்குள் கட்டாயம் திருப்பிக் கொடுக்க வேண்டும். காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெளிவாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இதுவரை மாநிலம் முழுவதும் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது 96 சதவீதத்துக்கும் மேல் விநியோகம் முடிந்துவிட்டது. சென்னை மாநகரில் மட்டும் 96 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவே இதுவரை சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.வழங்கப்பட்ட படிவங்களில் ஏறக்குறைய 50 சதவீதம் ஏற்கனவே எங்களிடம் திரும்ப வந்துவிட்டன. அவை அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள படிவங்களையும் பொதுமக்கள் டிசம்பர் 4-க்குள் கட்டாயம் நிரப்பித் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.சில அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ‘போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள், பீகார் தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்’ என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். உண்மை நிலை என்னவென்றால், தமிழ்நாட்டில் தொழில் செய்யும் அல்லது இங்கேயே நிரந்தரமாக வசிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த 869 பேர் மட்டுமே இதுவரை புதிதாக வாக்காளர் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் படிவம்-8 மூலம் விண்ணப்பித்து, முறையான வசிப்பிட ஆதாரங்களைச் சமர்ப்பித்த பிறகே பரிசீலிக்கப்படுவார்கள். எந்த முறைகேடும் நடக்கவில்லை.விசாரணை இல்லாமல் ஒரு வாக்காளரின் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. யாருடைய பெயர் நீக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாகத் தெரிவிப்போம். பொதுமக்களுக்கு எந்தப் பயமும் தேவையில்லை. உங்கள் உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி, டிசம்பர் 4-க்குள் SIR படிவத்தை நிரப்பித் திருப்பிக் கொடுப்பது மட்டுமே.டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதில் யாருடைய பெயரும் விடுபட்டிருந்தால் அல்லது தவறு இருந்தால் ஜனவரி 6, 2026 வரை புகார் தெரிவிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மிகத் துல்லியமான, நேர்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இதில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR (Special Intensive Revision) நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. இந்தப் பணி வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை மட்டுமே நடைபெறும். இந்தக் காலக்கெடு எந்தக் காரணத்தாலும் நீட்டிக்கப்படாது என்பதை மீண்டும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
