சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இன்றைய அமர்வு மிக முக்கியமான விவகாரங்களுடன் தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கமாக, இந்தியாவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்தும், அரசியலில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானங்களைச் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அரசியல் மற்றும் சமூகத்துறைகளில் பெண்களின் பங்களிப்பை பன்மடங்கு அதிகரிக்கும் நோக்கில் பெண்களுக்கான பிரத்யேக இடஒதுக்கீடு தொடர்பான தனித் தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்துக் கீழ்க்கண்ட முக்கியக் கருத்துகளைப் பதிவு செய்தார்.
இது குறித்து பேசிய அவர் "நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கை ஆகியோரை மையப்படுத்திய தீர்மானம் இது. பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது யாரும் வழங்கும் எளிய சலுகை அல்ல; அது அடிப்படையான சமூக நீதியாகும். மிகப்பெரிய அளவில் பணம் இருந்தால் வீட்டுக்கும், பொருளாதாரம் பலமாக இருந்தால் நாட்டுக்கும் பெரிய பெயர் வந்துவிடும் என்று சிலர் நினைக்கின்றனர்.
ஆனால், பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்து நின்றால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உண்மையான பெருமை சேரும். பெண்கள் அரசியல், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமமான வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே இந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய நோக்கமாகும்." எனவும் தெரிவித்தார்.
பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட முதல்வர் விஜய், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் வெறும் 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை உயர்ந்து 26 பெண்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார். எண்ணிக்கை அடிப்படையில் பேரவையில் பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு உரிய முன்னுரிமை வழங்குவதில் தவெக தலைமையிலான அரசு இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் மூலமாகவே பெண்களின் உண்மையான ஆளுமைத் திறன் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்துப் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் பெண்களின் மக்கள்தொகை மற்றும் வாக்குப்பதிவு சதவீதமே மிக அதிகமாக உள்ளதைச் சுட்டிக்காட்டினார். தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் சேர்த்து குழப்பம் விளைவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு இணைப்பதன் மூலம் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
உரிய ஆதரவு இல்லாத காரணத்தினாலேயே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர் விஜய், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைகளைக் காக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து அரசு இந்தத் தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளதாகவும் சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
