சென்னை :தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை 6.38 கோடி படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், போலி, இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 70 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து படிவங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். வரும் டிசம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு ஜனவரி 6 வரை ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம். பிப்ரவரி 10-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தீவிரத் திருத்தத்தில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்கள் ஆகியோரை நீக்குவதே முக்கிய நோக்கம்.
இதுவரை 70 லட்சத்திற்கும் மேல் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பெயர் விடுபட்டவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் இன்று மாலைக்குள் Form 6, Form 7, Form 8 படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதை voters.eci.gov.in, votertn.tn.gov.in இணையதளங்கள் அல்லது Voter Helpline App மூலம் செய்யலாம். பூத் லெவல் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து விண்ணப்பிக்கலாம். வரைவு பட்டியல் வெளியான பிறகு (டிசம்பர் 16 முதல்) மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றாலும், இன்று சமர்ப்பிப்பது பாதுகாப்பானது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 6.5 கோடி வாக்காளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலி வாக்காளர்களை நீக்குவதால் சில இடங்களில் வாக்காளர் எண்ணிக்கை குறையலாம். கடந்த 2021 தேர்தலில் 6.27 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்த முறை இளைஞர்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதால் எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம், “வாக்குச்சாவடி தோறும் சரியான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
