நாளை பதவியேற்பு! ஆளுநரை சந்தித்த விஜய்!

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்

Hero Image

சென்னை: தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு (118) தேவையான ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்களின் ஆதரவை வழங்கியுள்ளது.இன்று மாலை ஆளுநர் மாளிகையில் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து, தவெகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பித்தார். ஆட்சி அமைக்க அனுமதி கோரிய விஜய்க்கு ஆளுநர் உரிய அங்கீகாரம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் நாளை (மே 7, வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் தமிழ்நாட்டின் 17ஆவது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (Nehru Indoor Stadium) இந்தப் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இரு கட்சிகளுக்கும் இடையிலான புதிய கூட்டணியின் வலிமையை பிரதிபலிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. மீதமுள்ள ஆதரவைப் பெறும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை பதவியேற்பு! ஆளுநரை சந்தித்த விஜய்!