மாணவர்கள் இனி கல்வி நிறுவனங்களிலேயே சான்றிதழ்களைப் பெறலாம் அமைச்சர் செங்கோட்டையன்!

லீக்கேஜ் சரி பண்ணாலே போதும்.. நிதியை சிந்தாமல் சிதறாமல் துறையின் சார்பாக நிவர்த்தி செய்வதே முதலமைச்சர் விஜயின் கனவு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு மக்கள் நலனை மையமாக வைத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்றும், அந்த எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

“தமிழகத்தில் மாற்றம் உருவாக வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம் மட்டுமல்ல, அதை செயலில் காட்ட வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அனைவரும் எல்லாவற்றையும் பெற வேண்டும் என்ற மனிதநேய எண்ணத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும், “அடித்தட்டு மக்கள், விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு உடனடி பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது” என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்று பொறுப்பேற்ற பிறகு தலைமை கூடுதல் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

“தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 107 டிகிரி வரை உயர்ந்துள்ளது. அதனால் மக்களுக்கு என்ன மாதிரியான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், இன்னும் ஒரு வார காலத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், மழைக்காலத்தை எப்படி எதிர்கொள்வது, மக்களுக்கு தேவையான உதவிகளை எப்படி விரைவாக வழங்குவது என்பதையும் விவாதித்தோம்” என்றார்.

மேலும், “வருவாய் துறையின் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதலமைச்சரை மக்கள் பாராட்டும் வகையில் இந்தத் துறையை செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்றும் தெரிவித்தார்.

சென்னையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “மழைக்காலங்களில் மின்சாரத் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக அந்தத் துறையின் அமைச்சர் பதில் அளிப்பார். இருப்பினும், இதுபோன்ற தடைகள் வராமல் இருக்க முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

மாணவர்கள் தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். “பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள், அவர்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு வராமல், கல்வி நிறுவனங்களிலேயே வழங்கும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

“இன்னும் ஒரு வார காலத்திற்குள் மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற குறைபாடு வராத அளவிற்கு இந்தத் துறை செயல்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

நிதி நிலைமை குறித்து பேசுகையில், “நிதித்துறை பல ஆலோசனைகளை வழங்கும். ஆனால் முதலமைச்சரின் முக்கிய நோக்கம் எங்கெல்லாம் ‘Leakage’ இருக்கிறதோ அதை தடுக்க வேண்டும் என்பதுதான். நிதி சிந்தாமல், சிதறாமல் சரியாக பயன்படுத்தப்பட்டாலே பல குறைகளை சரி செய்ய முடியும்” என்று தெரிவித்தார். “முதலமைச்சரின் கனவுகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுத்தும்” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.