ராணிப்பேட்டை : தந்தை காந்திக்கு விட்டுக் கொடுத்தார் மகன் வினோத்!

ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதில் தந்தை உறுதியாக இருப்பதால் விட்டுக் கொடுக்கிறேன் என மகன் வினோத் காந்தி அறிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட மாற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் அமைச்சர் ஆர்.காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அமைச்சர் காந்திக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, வினோத் காந்தி தனது தந்தையின் விருப்பத்தை மதித்து ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.வினோத் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “மீண்டும் போட்டியிடும் என் தந்தையின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

முதலில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, தந்தைக்கு மரியாதை கொடுத்து அவர் விருப்பத்தை ஏற்றுக்கொண்டதாகவும், தற்போது தலைமை முடிவு செய்தபடி தந்தைக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் தானும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஏற்கனவே, “நான்தான் வேட்பாளர் என்பது உறுதியான தகவல். தலைமை அறிவித்துவிட்டது. நாளை மதியம் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதனால், ராணிப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் காந்தியே மீண்டும் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.இந்த வேட்பாளர் மாற்றம் திமுகவின் உள் அமைப்பில் சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், இறுதியில் குடும்ப ஒற்றுமையுடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் திமுகவின் வேட்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி தொடர்ந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.