பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது!

The CBI has arrested three people, including an AIADMK leader, in connection with the Pollachi sexual harassment case.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசர் 2019, மார்ச் மாதம்  கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே , பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக, பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகிய 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், பாலியல் வழக்கில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் மணிவண்ணனும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு  ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளிகள் 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது..