இனி மனுக்களுக்கு தீர்வு காண போறவங்க... மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல எனவும் உரிமை அரசுடன் சேர்ந்து புதிய வரலாற்றை படைக்கப் போகிறார்கள் என்றும் முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

M K Stalin

சென்னை :வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற “உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2025” மற்றும் “உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்” அறிமுக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். “அனைத்து மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். உங்களைப் பார்த்தாலே போதும்… பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது” என்று உருக்கமாகத் தொடங்கிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல உரிமை தான்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த நாள் வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல, சம உரிமை வழங்குவதை நினைவுறுத்தும் நாள் என்றும் அவர் வலியுறுத்தினார்.தி.மு.க அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். “ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் தன்னம்பிக்கையை உருவாக்கும் விதமாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இன்னும் 9,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக நியமிக்கப்பட உள்ளனர்” என்று அறிவித்தார்.

இது இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில அரசு கொண்டு வந்த சட்டம் என்றும், பிற மாநிலங்கள் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுடன் இணைந்து அவர்கள் வரலாறு படைக்கப் போகிறார்கள் என்றும் முதல்வர் உற்சாகம் தெரிவித்தார். மேலும், “மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கப்படுகிறது.

அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டுவதற்காகவே திராவிட இயக்கம் உருவானது” என்று பெரியார், அண்ணா, கலைஞர் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தார். திராவிட மாடல் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மேம்பட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

விழாவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் அவர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களது சாதனைகளைப் பாராட்டினார். “உங்களைப் பார்க்கும் போதே தன்னம்பிக்கை பிறக்கிறது” என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.