காஞ்சிபுரம் : தமிழகத்தில் அரசு டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக மீண்டும் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. அது என்னவென்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு இ-டெண்டர் வெறும் சில மணி நேரங்களுக்குள் முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை பெரிதானதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த டெண்டரை ரத்து செய்ததுடன், தொடர்புடைய இரண்டு அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
எந்த பணிக்காக டெண்டர் வெளியிடப்பட்டது?
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் இந்த இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்காக ரூ.16 லட்சத்து 83 ஆயிரத்து 194 மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.
கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், டெண்டர் நடைமுறை மேற்கொள்ளப்பட்ட விதமே தற்போது சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.
6 மணி நேரத்தில் டெண்டர் முடிவு?
இந்த டெண்டர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த கால அவகாசம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று காலை 9 மணிக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதே நாளில் மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், மாலை 4 மணிக்கே டெண்டர் திறக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, டெண்டர் வெளியீடு, விண்ணப்பம், பரிசீலனை மற்றும் ஒப்பந்தம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளும் வெறும் 6 மணி நேரத்துக்குள் முடிவடையும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.பொதுவாக அரசு டெண்டர்களுக்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். அதனால், “இவ்வளவு அவசரமாக டெண்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்வி எழுந்தது.
விளம்பரம் கூட இல்லை
இந்த டெண்டர் தொடர்பாக மற்றொரு முக்கிய சர்ச்சையும் எழுந்தது. அரசு டெண்டர்கள் பொதுவாக நாளிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் பரவலாக விளம்பரப்படுத்தப்படும். ஆனால் இந்த டெண்டர் தொடர்பான தகவல்கள் எந்த முக்கிய நாளிதழ்களிலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், “சில குறிப்பிட்ட நபர்களுக்காகவே டெண்டர் திட்டமிட்டு வழங்கப்பட்டதா?” என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. பலரும் இந்த டெண்டர் நடைமுறையை கடுமையாக விமர்சித்தனர்.
வைரலான சர்ச்சை
டெண்டர் அறிவிப்பின் Screenshot-கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. “உலகத்திலேயே இப்படி ஒரு டெண்டர் நடைமுறை பார்த்ததே இல்லை” என்று பலர் கிண்டலாக பதிவிட்டனர். குறிப்பாக, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக புஸ்சி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில், அவரது துறையின் கீழ் இப்படியான சர்ச்சை வெடித்தது அரசியல் வட்டாரத்தில் கூட பேசுபொருளாக மாறியது.
எதிர்க்கட்சியினரும் இந்த விவகாரத்தை முன்வைத்து அரசை விமர்சிக்க தொடங்கினர். “டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
அரசின் அவசர நடவடிக்கை
சர்ச்சை பெரிதாகியதை தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளித்தது. அதில், “குறுகிய கால டெண்டர் அறிவிப்பு வெளியிடுவதற்கு தேவையான அனுமதி பெறப்படவில்லை. விதிமுறைகளை மீறி டெண்டர் செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேசமயம், சர்ச்சைக்குரிய அந்த டெண்டரும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.
