கிருஷ்ணகிரி : ராயக்கோட்டையில் உள்ள இல்லத்தில் நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட கழக இளைஞரணி நிர்வாகி அன்பானந்தன் அரியப்பன் விவகாரம் மற்றும் சென்னை சைதாப்பேட்டையில் Gen Z கூட்டத்தில் பேசிய கனி என்ற இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்குத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
ஆளும் அரசின் இத்தகைய அடக்குமுறை மற்றும் காவல்துறை நடவடிக்கைகளை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் முழு விபரம் இதோ:
கழகத்தின் Gen Z இளைஞர்களை ஒருங்கிணைத்துத் தொடர்ச்சியாகப் பல்வேறு கூட்டங்களை நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயற்சி செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறையின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதேபோல சமீபத்தில் நடைபெற்ற Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது தவெக ரவுடிகள் சென்னை சைதாப்பேட்டையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்பி கனியைத் தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்தவொரு சட்டப்பூர்வ வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, மாறாகப் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தம்பி கனியை மிரட்டி அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளது என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
கழக இளைஞர்கள் தற்போதைய ஆளுங்கட்சியையும் அரசையும் எதிர்த்துப் பேசினால் காவல்துறையை ஏவி விடுவதும், அதுவே அவர்களைத் தாக்கியவர்கள் தவெகவினர் என்றால் காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் தான் இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றமா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்வாகத்திறனற்ற இந்த 'சோபா மாடல்' (Sofa Model) அரசின் போலி பிம்பமானது தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், இந்த ஆட்சியாளர்கள் தங்களது அதிகார அடக்குமுறையைக் கையில் எடுத்துள்ளார்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், கழக இளைஞர்களைக் காவல்துறையை வைத்து அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்றும், இத்தகைய போக்கு நீடித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
