ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.

Featured image

மதுரை : மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சீறிப் பாய்ந்த காளைகளையும், அவற்றை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களையும் கண்டு ரசித்தார். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் வீரத்தையும், வீரர்களின் துணிச்சலையும் பாராட்டி மகிழ்ந்த முதலமைச்சர், “சீறிப் பாய்ந்த காளைகளையும் – அவற்றைத் தழுவிப் பெருமை கொண்ட காளையர்களையும் அலங்காநல்லூரில் வாழ்த்தி மகிழ்ந்தேன்” என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பாராட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவதாக, ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கால்நடை பராமரிப்புத் துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார். இது வீரர்களுக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும் முக்கிய அறிவிப்பாக அமைந்தது.

இரண்டாவதாக, அலங்காநல்லூரில் காளைகளுக்காக ரூ.2 கோடி மதிப்பிலான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இந்த மையம் மாடுகளின் ஆரோக்கியத்தையும், பயிற்சியையும் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும்.

போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காளை உரிமையாளர் ராஜேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்க மோதிரத்தை பரிசாக அணிவித்து கவுரவித்தார். இந்த நிகழ்வு ஜல்லிக்கட்டு போட்டியின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது. முதலமைச்சரின் வருகையும், அறிவிப்புகளும் வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டாகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பங்கேற்பும், வீரர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டும், புதிய அறிவிப்புகளும் இந்த ஆண்டு போட்டிக்கு சிறப்பு சேர்த்துள்ளன. தமிழக அரசு ஜல்லிக்கட்டை பாதுகாக்கவும், வீரர்களை ஊக்குவிக்கவும் தொடர்ந்து முன்னெடுப்பு செய்து வருகிறது. இந்நிகழ்வு பொங்கல் திருவிழாவின் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.