பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் – அன்புமணி தரப்பு அறிவிப்பு!

கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி ஜி.கே.மணி நீக்கம் என அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.

Featured image

சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக  அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஜி.கே.மணி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி விவாதித்தது. ஜி.கே.மணி விளக்கம் அளிக்காத நிலையில், அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்த குழு, அதை அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொண்டார்.

இதன்படி ஜி.கே.மணி கட்சியில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளார்.அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் யாரும் ஜி.கே.மணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீக்கம் பாமகவில் உட்கட்சி பிளவு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஜி.கே.மணி தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இது கட்சியின் உள் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.