10 உணவுத் திட்டம் முதல் ஆசிரியர் நியமனம் வரை – பாமக தேர்தல் அறிக்கை!

நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும் என பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Hero Image

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் வெளியிட்டார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக 18 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், இந்த அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இதன் மூலம் மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம்.

ஏழை குடும்பத் தலைவிகள், கைம்பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 எல்பிஜி கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட நான்காம் தொகுதிப் பணிகளுக்கு 35,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளுக்கு 20,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக 2025-26ஆம் ஆண்டில் 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

2026-27 மற்றும் 2027-28 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

போக்குவரத்துத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப 10,000 பேர் நியமிக்கப்படுவார்கள்.

ரூ.10க்கு சோறு, சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொறியல், ஊறுகாய் உள்ளிட்ட நிறைவான மதிய உணவு வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை ரூ.25க்கு அசைவ மதிய உணவு வழங்கப்படும்.

ஏழைத் தொழிலாளர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய “மக்கள் உணவுத் திட்டம்” செயல்படுத்தப்படும்.

நீட் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும்.


தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ், “கடந்த காலங்களில் பாமகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ளது. ஒருசில கட்சிகள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றன. ஆனால் பாமக கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியம்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “திமுக தேர்தல் அறிக்கை ஒரு நகைச்சுவையாக வந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக படுதோல்வி அடைந்துள்ளது” என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.இந்தத் தேர்தல் அறிக்கை வெளியீடு, பாமகவின் தேர்தல் உத்தியில் முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது.