சென்னை :ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து ஈரானின் பதிலடி தாக்குதல்கள் காரணமாக சர்வதேச சந்தைகளில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. புவிசார் அரசியல் பதற்றம், எண்ணெய் விலை உயர்வு, டாலர் மதிப்பு ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை கடுமையாக பாதித்து வருகின்றன.
இந்த நிச்சயமற்ற சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தை நாடி வருவதால், தங்க விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டது.உலக சந்தையில் நிலவும் இந்த போக்கு உள்நாட்டிலும் தங்கம், வெள்ளி விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய கையிருப்பை வலுப்படுத்த தங்கத்தை பெருமளவு வாங்கி வருவதால், தங்கத்தின் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் உலகின் மிக மதிப்புமிக்க உலோகமாகத் தொடர்கிறது.
நேற்று (மார்ச் 2) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கும், கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.315-க்கு விற்பனையானது. இந்த குறைவு தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிவாரணம் அளித்தது.
இருப்பினும், இன்று (மார்ச் 3) தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்க விலை மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,25,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3.15 லட்சத்துக்கும் நிலையாக உள்ளது.இந்த விலை குறைவுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சிறு தளர்வு மற்றும் டாலர் மதிப்பில் ஸ்திரத்தன்மை முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், போர் பதற்றம் தொடர்ந்தால் தங்க விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.
