கோவை :விமான நிலையத்தின் பின்புறம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், நேற்று இரவு (நவம்பர் 3 ) ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று இளைஞர்கள் திடீரென வந்து, ஆண் நண்பரைத் தாக்கி விரட்டினர். பின்னர், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்கொடுமைக்கு ஆளான மாணவி, காயங்களுடன் தவித்த நிலையில், அவரது ஆண் நண்பர் உடனடியாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து, மாணவியை மீட்டு, உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவியின் உடல்நிலை தற்போது நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆண் நண்பரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவஹே தொடர்ந்து சம்பவம் நடந்த காரை போலீசார் மீட்டு, அதில் உள்ள ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று இளைஞர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பதிவுகள், சாட்சிகள் மற்றும் தடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.முடிவாக, இந்த கொடூர சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” 2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், பாதிப்புக்குள்ளான அம்மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக, எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன.
அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது. விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர். விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
