சென்னை :2026ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 முதல் 17ஆம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, தமிழ்நாடு அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இத்தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.3,000 ரொக்கமும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இப்பரிசு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன்கள் நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டன. மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா வேட்டி-சேலைகளும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 8) தொடங்கி வைத்தார். பயனாளிகளிடம் நேரடியாக பரிசுத் தொகுப்பையும் ரொக்கத்தையும் வழங்கி தொடக்க விழாவை அவர் நடத்தினார். இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 13ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகள் திறக்கப்பட்டு பரிசு வழங்கப்படும் என்பதால், அனைவரும் வசதியாக பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்திற்காக அரசு பெரும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட இத்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
