சென்னை : தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் இருந்த அண்ணாமலை, அதற்கான இறுதி முடிவை எடுத்த பிறகே டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது தனது அரசியல் எதிர்காலம் மற்றும் தனிக்கட்சி தொடர்பான முடிவுகளை அவர் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரையும் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை எவ்வாறு உருவானது, அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் அவர் விளக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த டெல்லி பயணத்தில் மற்றொரு முக்கிய அம்சமும் கவனம் பெற்றுள்ளது. பொதுவாக டெல்லி செல்லும் போது, பாஜக இளம் தலைவர் மற்றும் பெங்களூரு நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யாவின் இல்லத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இந்த முறை அந்த நடைமுறையை மாற்றி, பாஜக தலைமையகத்திற்கு அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாஜக முகமாக செயல்பட்டு வந்த அண்ணாமலை, இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கியுள்ளார். இதனால் அவர் உண்மையிலேயே புதிய கட்சி தொடங்கினால், அது தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கருத்தும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனினும், அண்ணாமலை தரப்பிலோ அல்லது பாஜக தலைமையிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே தனிக்கட்சி குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாத அரசியல் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன. டெல்லியில் நடைபெற உள்ள முக்கிய சந்திப்புகளுக்குப் பிறகு அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன என்பது தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
