விமான சேவை 7வது நாளாக பாதிப்பு...ரூ.610 கோடியை திருப்பி வழங்கிய இண்டிகோ!

நிர்வாக காரணமாக இன்று 38 புறப்பாடு, 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தகவல் வெளியாகியுள்ளது.

Indigo Airlines

சென்னை :சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை தொடர்ந்து 7-வது நாளாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களால் (விமானிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை) இன்று மட்டும் 38 புறப்பாடு விமானங்களும், 33 வருகை விமானங்களும் என மொத்தம் 71 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சினையால் இதுவரை இண்டிகோ நிறுவனம் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை தினசரி சராசரியாக 50-70 விமானங்கள் ரத்தாகி வருகின்றன. பயணிகள் பெரும்பாலும் மாற்று விமானங்களில் செல்ல முயன்றாலும், டிசம்பர் மாத பண்டிகை சீசன் என்பதால் மற்ற ஏர்லைன்ஸ்களும் நிரம்பியுள்ளதால் டிக்கெட் கிடைப்பதே பெரும் சிரமமாக உள்ளது.

இந்த ரத்துகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ இதுவரை ரூ.610 கோடி வரை திருப்பித் தந்துள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழு டிக்கெட் தொகை திருப்பி அளிப்பு, இலவச மறு முன்பதிவு, ஹோட்டல் தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கப்படுவதாக இண்டிகோ தரப்பில் கூறப்பட்டாலும், பல பயணிகள் “மூன்று நாட்களாக விமான நிலையத்தில் தவிக்கிறோம், போதிய உதவி கிடைக்கவில்லை” என்று புகார் தெரிவித்து வருகின்றனர்.

இண்டிகோ நிர்வாகம் தற்போது “அடுத்த மூன்று நாட்களுக்குள் (டிசம்பர் 11-க்குள்) சேவை முழுமையாக ச் சீராகும்” என்று உறுதியளித்துள்ளது. புதிய விமானிகளையும் பணியாளர்களையும் விரைவாகச் சேர்ப்பதாகவும், டிசம்பர் 15-க்குள் முழு இயல்பு நிலை திரும்பும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து 7 நாட்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினை, இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) கவனத்துக்குச் சென்றுள்ளது. விரைவில் இண்டிகோ மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.