தூக்கி எறிவாங்க! - பேரவையில் பிரேமலதா - ஓபிஎஸ் இடையே வெடித்த 'தண்ணீர்' நகைச்சுவை விவாதம்!

பிரேமலதாவின் பாட்டில் பரிந்துரையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், "சபையில் கோபம் வந்தால் பாட்டிலைத் தூக்கி எறிவார்கள்" என்று கலகலப்பாகக் கூறி அவையைக் கிளறினார்.

Hero Image

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட ஒரு நகைச்சுவை தருணம் அவையையே சிரிப்பில் ஆழ்த்தியது.

தேமுதிக பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரான பிரேமலதா விஜயகாந்த், பேரவையில் உறுப்பினர்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் நடைமுறை குறித்து கருத்து தெரிவித்தார். தற்போது சட்டப்பேரவை பணியாளர்கள் ஒவ்வொரு உறுப்பினரின் மேசைக்கும் சென்று குனிந்து டம்ளர்களில் தண்ணீர் வழங்கும் நடைமுறை இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்கு பதிலாக தண்ணீர் பாட்டில்கள் வைக்கலாம் என பரிந்துரைத்தார்.

இதுகுறித்து பேசிய பிரேமலதா, "உறுப்பினர்களுக்கு தேவையான அளவு தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு மேசையிலும் தண்ணீர் பாட்டில்களை வைத்தால் பணியாளர்களின் பணிச்சுமையும் குறையும். தொடர்ந்து குனிந்து சென்று தண்ணீர் வழங்க வேண்டிய அவசியமும் இருக்காது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட பேரவை உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், "அதை நான் ஏற்கவில்லை. கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிவார்கள்" என்று நகைச்சுவையாக கூறினார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த பிரேமலதா, "எறிய வேண்டும் என்று நினைத்தால் பாட்டில் மட்டும் இல்லை, இப்போது இருக்கும் சில்வர் டம்ளரையும் எறியலாம்" என்று சிரித்தபடியே பதிலடி கொடுத்தார்.

இந்த விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது குறுக்கிட்ட உறுப்பினர் தங்கம் தென்னரசு, "இது ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த வாழ்க்கை அனுபவமா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்று நகைச்சுவையாக கூறினார்.

இதையடுத்து அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர். காலை முதலே கடுமையான அரசியல் விவாதங்களால் பரபரப்பாக இருந்த சட்டப்பேரவை, இந்த நகைச்சுவை உரையாடலால் சில நிமிடங்கள் கலகலப்பாக மாறியது.முதலமைச்சர் விஜயும் இந்த உரையாடலை கேட்டு சிரித்ததார். கடுமையான விவாதங்களுக்கு நடுவே ஏற்பட்ட இந்த சுவாரஸ்யமான தருணம் சட்டப்பேரவையில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தூக்கி எறிவாங்க! - பேரவையில் பிரேமலதா - ஓபிஎஸ் இடையே வெடித்த 'தண்ணீர்' நகைச்சுவை விவாதம்!