“குடும்பத்துக்கு கடனா?” – விஜயை சாடிய முத்தரசன்

யாரவது தன் குடும்பத்திற்கு கடன் கொடுத்து பார்த்தது உண்டா என விஜயை விமர்சித்து CPI முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன்.“யாராவது தன் குடும்பத்திற்கு கடன் கொடுத்து பார்த்தது உண்டா?” என்று கேள்வி எழுப்பிய முத்தரசன், விஜய்யின் சொத்து விவர அறிக்கையை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனம் செய்தார்.

முத்தரசன் பேசுகையில்,“தமிழ்நாட்டில் நாலணி, அஞ்சணி என்று பல அணிகள் உருவாகி வருகின்றன. ஜெயலலிதா, சசிகலா, ராமதாஸ் போன்றவர்கள் ஒரு அணியை உருவாக்கியதுபோல, இப்போது புதிதாக ஒரு தலைவர் நூறு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார். அது வேறு விஷயம். ஆனால், திரைப்படத்தில் கிடைத்த புகழ் மற்றும் ரசிகர் ஆதரவை வைத்து அரசியலிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பி புதிய கட்சி தொடங்கியிருக்கிறார். இது தவறல்ல. ஆனால் அரசியல் வேறு, திரைப்பட உலகம் வேறு என்பதை காலம் நிரூபித்துள்ளது.

செவாலியர் சிவாஜி கணேசன் போன்ற மாபெரும் நடிகர் கூட தனியாகக் கட்சி தொடங்கி திருவையார் தொகுதியில் போட்டியிட்டும் தோற்றுப்போன வரலாறு நமக்கு உண்டு. ஒரு அரசியல் கட்சித் தலைவர் தேர்தல் ஆணையத்தில் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கும்போது, ‘அப்பாவுக்கு கடன் கொடுத்தேன், அம்மாவுக்கு கடன் கொடுத்தேன், மனைவிக்கு கடன் கொடுத்தேன், மகனுக்கு, மகளுக்கு கடன் கொடுத்தேன்’ என்று குறிப்பிடுவது மிகவும் விசித்திரமானது.

இதுவரை எந்த அப்பாவும் தன் குடும்பத்தினருக்கு இப்படி கடன் கொடுத்ததை நான் பார்த்ததில்லை. இது அரசியலில் நடக்கும் ஒரு கூத்து” என்றார்.மேலும், விஜய்யின் பொதுக்கூட்டங்களில் கூட்டம் கூடுவது பற்றியும் பேசிய முத்தரசன், “பட நடிகர் வெளியே வந்தால் பார்ப்பதற்கு கூட்டம் வரும். ஆனால் பேச்சைக் கேட்பதற்கு வரும் கூட்டம் வேறு. முதலமைச்சருக்கு வரும் கூட்டம் பேச்சைக் கேட்க வரும் கூட்டம். இங்கு வரும் கூட்டம் பார்ப்பதற்கு வரும் கூட்டம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு” என்று கூறினார்.

தவெகவை பாஜகவின் “வஞ்சக வலையில்” விழுந்த கட்சி என்றும், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகாமல் தடுக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்றும் முத்தரசன் குற்றம் சாட்டினார். மாநில அரசை தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் திமுகவுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இறுதியாக, “இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் டெல்லிக்கும் இடையிலான அரசியல் யுத்தம். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்” என்று முத்தரசன் தெரிவித்தார்.

“குடும்பத்துக்கு கடனா?” – விஜயை சாடிய முத்தரசன்