40 விநாடிகளில் 2 செல்போன்கள் அபேஸ்...MTC பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி!

சென்னை MTC 17B பேருந்தில் இளம்பெண்ணின் பையை பிளேடால் கிழித்து 40 விநாடிகளில் 2 செல்போன்கள் திருடப்பட்டதாக புகார்.

Hero Image

சென்னை : மாநகரப் பேருந்துகளில் (MTC Bus) பயனிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம்பெண் ஒருவர் தனது பையை பிளேடால் கிழித்து வெறும் 40 விநாடிகளுக்குள் இரண்டு செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற விவகாரத்தை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கே.கே. நகர் VSI ஸ்டாப்பில் இருந்து 17B எண் கொண்ட MTC பேருந்தில் ஏறி எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகில் இறங்க திட்டமிட்டுள்ளார். பஸ்ஸில் ஏறியது முதல் எழும்பூர் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல் ஸ்டாப் வரை அவர் சீட்டில்தான் அமர்ந்திருந்துள்ளார். அந்த நேரத்தில் பேருந்தில் அவரிடம் சுமுகமாகப் பேசிய வயதான பாட்டி ஒருவர், அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு திசைதிருப்பியுள்ளார்.

அந்தப் பாட்டி இளம்பெண்ணிடம் போன் வாங்கிப் பேசுவது போலவும், கடலை வேண்டுமா என்று கேட்பது போலவும், "தண்ணீர் இருக்கா?", "பவர் பேங்க் இருக்கா?", "எங்க இறங்கப் போறீங்க?" எனப் பல கேள்விகளைக் கேட்டுப் பேச்சுக் கொடுத்துள்ளார்.

பாட்டி கேட்டதால் தன் போனை கொடுத்துப் பேசிய இளம்பெண், அதுவே தனக்கு இவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும் திசைதிருப்பலையும் (Distraction) ஏற்படுத்தும் என்று அப்போது நினைக்கவில்லை. வழக்கமாக தான் பஸ்ஸில் ஹெட்ஃபோன் போட்டுக்கொண்டு யாரிடமும் பேசாமல் இருப்பதாகவும், ஆனால் பாட்டி வயதானவர் என்பதால் கனிவாகப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பாட்டி குறிப்பிட்ட ஒரு நிறுத்தத்தில் (WCC அருகில்) இறங்கிவிட்டார். அதற்கு அடுத்த நிறுத்தமான எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் இறங்குவதற்காக அந்த இளம்பெண் முயன்றுள்ளார். அதற்குள் அந்த குறுகிய இடைவெளியில் (சுமார் 30 முதல் 40 விநாடிகளுக்குள்) பஸ்ஸில் இருந்த மர்ம நபர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர்.

அந்த நேரத்தில் இளம்பெண்ணின் கண்ணில் ஏதோ விழவே, அவர் கண்களைக் கசக்கிக் கொண்டு தன் தோழியின் கையைப் பிடித்துக் கொண்டுள்ளார். இந்த மிகக் குறுகிய விநாடி இடைவெளியில்தான் பாயில் இருந்த ஓட்டை வழியே வைக்கப்பட்டிருந்த இரண்டும் செல்போன்களும் நைசாகத் திருடப்பட்டுள்ளன.