மத்தியப் பிரதேசம் : மத்திய அரசின் E20 பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை விமர்சிக்கும் வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பேசியுள்ள சர்ச்சைப் பேச்சு தற்போது நாடு முழுவதும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா (Rewa) தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ஜனார்த்தன் மிஸ்ரா, போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் சேர்ப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை முழுமையாக ஆதரித்துப் பேசியதுடன், திட்டத்தை எதிர்ப்பவர்களையும் கடுமையாகச் சாடினார்.
இது குறித்து அவர் பேசுகையில் " பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நம் நாட்டில் தூய பெட்ரோல் இல்லையேன்றால், அது எங்கிருந்து வரும்? தூய பெட்ரோல் என்ன உங்களுடைய அப்பா வீட்டிலிருந்தா வருகிறது" என காட்டத்துடன் கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் " எத்தனால் கலப்புத் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கிப் பேசிய எம்பி மிஸ்ரா, இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெயில் வெறும் 20 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்வதாகவும், மீதமுள்ள 80 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழல்கள் (Geopolitical situation) மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் உள்ள சவால்கள் காரணமாக, எண்ணெய் டேங்கர்கள் கூடுதல் தூரம் அதாவது சுமார் 18,000 கி.மீ சுற்றி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். "இத்தகைய இக்கட்டான சூழலில்தான், பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்" என்றார்.
எத்தனால் சேர்ப்பதால் வாகனங்களின் எஞ்சினுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள வாகன ஆய்வாளர்கள் எத்தனால் கலப்பால் எஞ்சின் தேய்மானம், அரிப்பு அல்லது வாகனத்தின் ஆயுள் குறைவது போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பயோகாஸ் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகவும் ஜனார்த்தன் மிஸ்ரா கூறினார்.
