தொகுதி மறுவரையறை என்றால் என்ன? நடந்தால் என்ன ஆகும்?

இன்று மாலை 3 மணிக்கு தொகுதி மறுவரையறை குறித்து மக்களவையில் பிரதமர் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்.

Hero Image

டெல்லி : இந்தியாவில் தொகுதி மறுவரையறை மீண்டும் பேசப்படும் முக்கிய அரசியல் விவகாரமாக மாறியுள்ளது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை மாற்றும் இந்த நடைமுறை, நாட்டின் அரசியல் சமநிலையை நேரடியாக பாதிக்கும் என்பதால் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

தொகுதி மறுவரையறை என்றால் என்ன?

இந்தியாவில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றுவது தான் தொகுதி மறுவரையறை. ஒரு பகுதியில் மக்கள் தொகை அதிகரித்தால் அந்தப் பகுதியில் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படலாம். அதே சமயம் மக்கள் தொகை குறைவாக இருந்தால் தொகுதிகள் குறையவும் செய்யலாம். இதன் நோக்கம் ஒவ்வொரு மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் எப்படி தொடங்கியது?

அப்போது இருந்த மத்திய அரசு, மக்கள் தொகை வேகமாக அதிகரித்ததால் சில மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து அரசியல் சமநிலை பாதிக்கப்படும் என்ற காரணத்தால், தொகுதி மறுவரையறையை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நிறுத்தி வைத்தது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயற்சி செய்த மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த தடை காலம் முதலில் 2001ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் இதே காரணங்களை முன்னிறுத்தி, மேலும் ஒரு முறை காலவரம்பு நீட்டிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு வரை தொகுதி மறுவரையறை நடைமுறையில் அமல்படுத்தப்படாமல் வைத்தனர். இதன் காரணமாகவே தற்போது 2026 காலவரம்பு முடிவடைய உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து நாடு முழுவதும் மீண்டும் விவாதம் அதிகரித்துள்ளது.

ஏன் இப்போது மீண்டும் பேசப்படுகிறது?

இந்த தடை காலம் 2026 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அந்த காலவரம்பு முடிவடையும் நிலையில் இருப்பதால், மீண்டும் தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் அதிகரித்துள்ளது. ஆனால் இதை எந்த அடிப்படையில் செய்யப் போகிறார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான விளக்கம் இல்லை என்பதும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சியில் உள்ள பெரிய வித்தியாசம்

தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி குறைவாகவே உள்ளது. கல்வி, மருத்துவம், குடும்பக் கட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தென் மாநிலங்களுக்கு ஏன் அச்சம்?

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இப்போது தண்டனை கிடைப்பது போல நிலை உருவாகலாம் என்ற கவலை உள்ளது.புதிய மறுவரையறையில், தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையலாம் என்றும், அதனால் அதன் அரசியல் வலிமை குறையும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பல இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்குமா?

மறுவரையறை நடந்தால் வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். இதனால் அந்த மாநிலங்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும். ஒரு சில மாநிலங்களின் ஆதரவால் மட்டுமே மத்திய ஆட்சி அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும், இதனால் மற்ற மாநிலங்களின் முக்கியத்துவம் குறையும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உதாரணமாக, மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என கணக்குகள் காட்டுகின்றன.

  • உத்தரப் பிரதேசம்: 80 இருந்து 140 ஆக உயர வாய்ப்பு
  • பீகார்: 40 இருந்து 73
  • ராஜஸ்தான்: 25 இருந்து 48
  • மத்திய பிரதேசம்: 29 இருந்து 51
  • மகாராஷ்டிரா: 48 இருந்து 79

எண்ணிக்கையில் என்ன மாற்றம்?

சில கணக்குகளின்படி, தற்போது உள்ள தொகுதிகளை மாற்றாமல் மறுவரையறை செய்தால், தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு வழியில் மொத்த தொகுதிகளை அதிகரித்தாலும், வட மாநிலங்களுக்கு கிடைக்கும் உயர்வு அதிகமாக இருக்கும்; தென் மாநிலங்களுக்கு கிடைக்கும் உயர்வு குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

  • தமிழ்நாடு: 39 இருந்து 51
  • கேரளம்: 20 இருந்து 23
  • ஆந்திரா + தெலங்கானா: 42 இருந்து 59
  • ஒடிசா: 21 இருந்து 29
  • மேற்கு வங்காளம்: 42 இருந்து 64

இதனால் வளர்ச்சி செய்த மாநிலங்களுக்கு குறைந்த பலன் கிடைக்கும் என்ற விமர்சனம் எழுகிறது.

தொகுதிகள் அதிகரித்தால் என்ன ஆகும்?

மொத்த தொகுதிகள் 848 ஆக உயர்த்தப்பட்டாலும்:

வட மாநிலங்கள்: 174 இருந்து 324 ஆக அதிகரிக்கும்

தென் மாநிலங்கள்: 129 இருந்து 164 ஆக மட்டுமே உயரும்

எனவே, இதனால் கூட வட மாநிலங்களுக்கே அதிக ஆதிக்கம் கிடைக்கும் நிலை உருவாகும்.

மேலும், முடிவாக தொகுதி மறுவரையறை என்பது ஒரு சாதாரண நிர்வாக மாற்றம் அல்ல. இது நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றக்கூடிய பெரிய விஷயம். எந்த மாநிலத்துக்கும் இழப்பு இல்லாமல், அனைவருக்கும் சமமான உரிமை கிடைக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.