டெல்லி : நாட்டு மக்கள் அவசியமின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள புதிய வேண்டுகோள், நாட்டின் பங்குச் சந்தையிலும் நகை வர்த்தகத் துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "சுதேசி" (Swadeshi) மற்றும் "உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்" (Vocal for Local) என்ற மந்திரத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இந்த முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த அறிவிப்பின் எதிரொலியாக, செவ்வாய்க்கிழமை காலை பங்குச் சந்தை வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. அதன்படி, காலை 11:50 நிலவரப்படி, தேசியப் பங்குச் சந்தையில் (NSE) டைட்டன் நிறுவனம் 1.10% சரிந்து ரூ.5,046-க்கும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சுமார் 4.38% சரிந்து ரூ.574.70-க்கும் வர்த்தகமாயின. மேலும், பிசி ஜூவல்லர், கோல்டியம் இன்டர்நேஷனல் மற்றும் தமிழகத்தின் முன்னணி நிறுவனமான தங்கமயில் ஜுவல்லரி உள்ளிட்ட இதர நகை நிறுவனங்களின் பங்குகளும் சுமார் 2% வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.
இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியத்தில், குறிப்பாகத் திருமணங்கள் மற்றும் விசேஷ காலங்களில் தங்கம் வாங்குவது இன்றியமையாத அங்கமாக விளங்கி வரும் சூழலில், பிரதமரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. சுதேசி சிந்தனை மற்றும் சுயசார்புப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது சுதந்திரத்தின் நூறாவது ஆண்டைக் கொண்டாடும் குறிய இலக்கான "விக்சித் பாரத்" (Viksit Bharat) என்ற வளர்ந்த இந்தியாவை நோக்கி விரைவாக முன்னேற முடியும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் சென்று திருமணம் நடத்துவதைத் தவிர்த்து இந்தியாவில் திருமணங்களை நடத்த வேண்டும் என்றும், அவசியத் தேவையின்றி வெளிநாடு செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் இதுபோன்ற ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது இது முதல் முறையல்ல. கடந்த மே 10-ஆம் தேதியன்று, மேற்கு ஆசிய நெருக்கடியின் போது அன்னிய செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கிலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் இதேபோன்ற ஏழு முக்கியக் கோரிக்கைகளை அவர் விடுத்திருந்தார். அப்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது, வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது, அதிகப்படியான தங்க வாங்குதலைக் கட்டுப்படுத்துவது, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் வெளிநாட்டு உரங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
