6 நாட்களில் ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 12-வது நாளான நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. கொரோனா தடுப்பு மருந்தை இதுவரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது. 41,599 முகாம்களில் 23,28,779 சுகாதார பணியாளர்களுக்கு நேற்று மாலை 6 மணி வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 2,99,299 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில், 6 நாட்களில் ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா 10 நாட்கள், இஸ்ரேல் 14, பிரிட்டன் 18, இத்தாலி 19, ஜெர்மன் 20 நாட்களில் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு, டெல்லி, ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் தங்கள் செயல்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.