பீகார் :ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சிபு சோரன் (81) காலமானார். சிறுநீரக பாதிப்பால் டெல்லி கங்கா ராம் ஹாஸ்பிடலில் கடந்த ஜூன் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மறைவை அவரது மகனும், ஜார்க்கண்டின் தற்போதைய முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தினார். அவரது பதிவில், “என் அன்பு திஷோம் குருஜி எங்களை விட்டு விடைபெற்றுவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவராக சிபு சோரன் 38 ஆண்டுகள் பதவி வகித்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 2009 – 2010ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். சிபு சோரன், ஜார்க்கண்ட் மாநில உருவாக்கத்திற்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவராகவும் அறியப்படுகிறார்.
அவர் மூன்று முறை ஜார்க்கண்ட் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். இந்த நிலையில், அவரது மறைவு ஜார்க்கண்ட் மற்றும் இந்திய அரசியலில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
